தூர நோக்கு

புனர்வாழ்வளித்தலின் ஊடாக சமூக பொருளாதார மற்றும் சமூக இணக்கப்பாட்டை ஏற்படுத்தல்.

குறிக்கோள்

வன்செயல்கள், குழப்பங்கள், இனக்கலவரங்கள், யுத்தம் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களினது மறுவாழ்வை புனர்வாழ்வினூடாக ஏற்படுத்தி பொருளாதார விருத்தி கண்ட தேசமாக, சமூகமாக ஆவதற்குரிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல்.

1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் திகதிய மற்றும் அதனையொட்டிய காலப்பகுதிகளில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் விளைவாக எண்ணிலடங்காதோர் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கானோரின் உடமைகளும் அழித்தொழிக்கப்பட்டன. இத் துரதிஷ்டமான சம்பவம் இலங்கை வரலாற்றில் கறுப்பு ஜுலையாகப் பதிவானது. குறிப்பாகக் கொழும்பு, அதனை அண்டிய நகர்ப்புறங்களைச் சேர்ந்த தமிழர்களது குடியிருப்புகள், வியாபார ஸ்தலங்கள், கைத்தொழில்கள் ஆகியன நிர்க்கதியாக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் 1983  ஆகஸ்ட் மாதம்  8 ஆம் திகதிய விஷேட வர்த்தமானி அறிக்கை அத்துடன் அவசர காலச் சட்டத்தின் படி முன்னாள் ஜனாதிபதி கௌரவ ஜே. ஆர். ஜயவர்தன அவர்களின் நடப்பாட்சியின் கீழ் பாதிப்படைந்த மக்களது அழிவடைந்த சொத்துக்களின் உரிமையினைப் பாதுகாக்கும் நோக்கில் ஆட்களையும் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைப்புச்செய்யும் அதிகார சபையானது ஸ்தாபிக்கப்பட்டது.

ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைப்புச்செய்யும் அதிகார சபையானது ஸ்தாபிக்கப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதியாகக் கடமையாற்றிய கௌரவ ஜே.ஆர். ஜயவர்தன அவர்களின் கிழ் முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் பெரேராவைத் தலைவராகக் கொண்டு இயங்கியது.

மேலும் படிக்க

×

அதிகாரசபையின் பிரதான இலக்குகளாக,

 • அழிவடைந்த சொத்துக்களை புதுப்பித்தல்/ புனர்நிர்மானம் செய்தல்
 • அழிவடைந்த கைத்தொழில்களை புனர்வாழ்வு செய்தல்
 • பயங்கரவாத வன்செயல் காரணமாக விட்டுச் சென்ற சொத்துக்களின் உண்மையான உரிமையினைப் பாதுகாத்தல்.(Vesting & Divesting)

1983ம் ஆண்டு அவசர நீதிச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட ஆதனங்களையும், கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகாரசபையானது 1986 இல் நடப்பாண்டின் ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தன அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் 1985 இல 101 இன் கீழ் சிபாரிசினைப் பெற்றது. 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் அவ் அமைச்சரவைத் தீர்மானமானது ஜனாதிபதியினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்து சட்டமாக்கப்படுவதற்கான அனுமதியினை அமைச்சரவையில் பெற்றுக் கொண்டது. இதற்கமைய 1987 ம் ஆண்டு 29ம் இலக்கப் பாராளுமன்றச் சட்டத்தின்படி ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகாரசபையானது (REPPIA) ஸ்தாபிக்கப்பட்டது.

1987ம் ஆண்டு கௌரவ புனர்வாழ்வு அமைச்சராக திரு.லயனல் ஜயதிலக அவர்கள் நியமிக்கப்பட்டதுடன், புனர்வாழ்வு அதிகாரசபை இவ்வமைச்சின் கீழ் இயங்கியது. அன்றிலிருந்து புனர்வாழ்வு அதிகாரசபையின் கீழ் பல்வேறு நிவாரணத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டதுடன் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்ற இன மோதல்கள், சிவில் கலவரங்கள், பயங்கரவாத வன்செயல்கள், பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக இடர்களுக்குள்ளாக்கப்பட்ட பொது மக்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் பணியினையும் நிறைவேற்றியது.

புனர்வாழ்வு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள்

புனர்வாழ்வு அதிகாரசபையில் 1991 ஆம் ஆண்டளவில் 35 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சின் பரிந்தரையின் பெயரில் அதிகாரசபைக்கு இரண்டு உதவிப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 1994 ஆம் ஆண்டளவில் அதிகாரசபையின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்பட்டதுடன் இரு முகாமைத்துவ உதவியாளர்களும், பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டனர்.

2005 இல் அரச தீர்மானத்திற்கிணங்க மேலும் 25 பட்டதாரி ஊழியர்கள் இவ் அதிகாரசபையில் நியமனம் பெற்றனர். இவ் அனைத்து ஊழியர்களும் அடங்கலாக பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட 75 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 2014 ஆம் ஆண்டளவில் அதிகாரசபையின் அனைத்து உத்தியோத்தர்களின் நியமனங்களும் நிரந்தரமாக்கப்பட்டதுடன் புனர்வாழ்வு அதிகாரசபையின் வகிபங்கானது சுய தொழிற் கடன் திட்டம், வீட்டுக் கடன் திட்டம், சமூகத்துடன் மீளிணைக்கப்பட்ட பயிலுனர்களுக்கான கடன் திட்டம் என்பவற்றினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் விஸ்தீரணம் அடைந்தது.

புனர்வாழ்வு அதிகாரசபையின் கீழ் இயங்கும் விஷேட கூறுகள்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) செயற்றிட்ட அலுவலகமானது 1990-1995 காலப்பகுதிகளில் நிறுவப்பட்டதுடன் இவ்வலுவலகமானது இந்தியாவில் வசித்துவரும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த அகதிகளை இலங்கைக்கு மீள அழைத்துவரும் அலுவல்களையும் அமுல்ப்படுத்துகிறது.

பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு செய்யும் முகமாகக் கணணிப் பிரிவொன்று 1997-2000 ஆண்டு காலப் பகுதியில் தாபிக்கப்பட்டது. இதற்கிணங்க ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு 1987-1990 ஆண்டு காலப்பகுதிகளில் 10,880 காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.

அமைச்சரவையின் அனுமதிக்கிணங்க அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான நபர்களுக்கான மானிய உதவி வழங்கும் விதத்தில் செயற்படுவதற்கான கூறு ஒன்று 1997-2000 ஆண்டு காலப்பகுதியில் தாபிக்கப்பட்டது.

எமது கடமைகள்

1987ம் ஆண்டின் 29ம் இலக்கமுடைய சரத்தின் கட்டளைகளின் கீழ் புனர்வாழ்வு அதிகாரசபையின் பணிகள் கீழ் வருமாறு:

 • பாதிக்கப்பட்ட ஆட்களை புனர்வாழ்வு செய்யும்பொருட்டு மீண்டும் மீளப்பெறாமல் கொடை வழங்கல் அல்லது தேவையான எவையேனும் வழிவகைகளில் அவர்களின் புனர்வாழ்வுக்கு உதவி செய்தல்.
 • பாதிக்கப்பட்ட ஆதனம் அதனது சொந்தக்காரருக்கு, அத்தகைய ஆதனத்தை புதுப்பித்தலுக்கு அல்லது புனரமைப்பு செய்வதற்கும் ஒன்றில் பூரண மானியக் கொடை வாயிலாகவோ அல்லது அத்தகைய பழுதுபார்க்கும் அத்துடன் மீளப் புதுப்பிக்கும் நோக்கத்திற்கு நிதியிலிருந்து பெறப்பட்ட ஏதேனும் செலவினத்தை மீளக் கொடுப்பனவு செய்வதனை உறுதிப்படுத்துவதற்காக புனர்வாழ்வு அதிகாரசபை என்பதனாலும் அத்தகைய சொந்தக்காரரினாலும் உடன்பட்டுக் கொள்ளப்படக்கூடியவாறான அத்தயை நியாயமான நிபந்தனைகளுக்கமைவாகவோ உதவியளித்தல்.
 • சேதப்படுத்தப்பட்ட ஆதனமாவுள்ள பாதிக்கப்பட்ட ஆதனம் எதனதும் வாடகைக் குடியிருப்பாளருக்கு, அத்தகைய ஆதனத்தின் சொந்தக்காரர், அத்தகைய ஆதனத்தைப் பழுதுபார்ப்பதற்கும், மீளப்புதுப்பிப்பதற்கும் இயலாதவராக அல்லது விருப்பமில்லாதவராக இருந்தால், அத்துடன் புனர்வாழ்வு அதிகாரசபையானது விடயத்தின் எல்லாச் சூழ்நிலைகளையும் கருத்திற்கொண்டு அவசியமான பழுதுபார்த்தல்களையும் மீளப்புதுப்பித்தல்களையும் செய்து முடிப்பதற்கு அத்தகைய வாடகைக் குடியிருப்பாளருக்கு அதிகாரமளிப்பது நீதியானதும் ஒப்புரவானதும் எனத் திருப்திப்பட்டால் அத்தகைய ஆதனத்தைப் பழுதுபார்ப்பதற்கும், மீளப்புதுப்பிப்பதற்கும் உதவியளித்தல்
 • கட்டிடமொன்றை அல்லது கட்டமைப்பொன்றை கொண்டதான பாதிக்கப்பட்ட ஆதனம் எதனையும் இடித்தழித்து, அத்துடன் அகற்றுமாறு கட்டளையிடுதல்.
 • பாதிக்கப்பட்ட கைத்தொழில் அல்லது தொழிலெதனதும் உரிமையாளருக்கு அத்தகைய கைத்தொழிலை அல்லது தொழிலைப் புனரமைப்பதற்கு அத்தகைய புனரமைப்புக்கு நிதியத்திலிருந்து பெறப்படும் ஏதேனும் செலவினத்தை மீளக் கொடுப்பனவு செய்வதனை உறுதிப்படுத்துவதற்காக புனர்வாழ்வு அதிகாரசபை என்பதனாலும் அத்தகைய உரிமையாளரினாலும் உடன்பட்டுக் கொள்ளப்படக்கூடியவாறான அத்தகைய நியாயமான நிபந்தனைகளுக்கு அமைவாக உதவியளித்தல்.

REPPIA ஆற்றும் பணிகள்

 • ஒருங்கிணைந்த நிவாரண உதவித்திட்டத்தின் (UAS) கீழ் மீள் குடியேற்றக் கொடுப்பனவை ஒழுங்குபடுத்தலும் மேற்பார்வை செய்தலும்.
 • பயங்கரவாத வன்செயல் காரணமாக இறந்த/ காயமுற்ற/ சொத்துக்களுக்காக ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக நட்டஈடு வழங்கல்.
 • பயங்கரவாத வன்செயல் காரணமாக சொத்துக்கள் அழிவுற்றல் அல்லது அவற்றுடன் செயற்பட்டுள்ளதிற்காக நட்டஈடு வழங்கல்.
 • பாதிப்புற்ற அன்றேல் அழிவுற்ற வணக்கஸ்தலங்களைப் புனர்நிர்மாணம் செய்ய உதவியளித்தல்.
 • தேர்தல் வன்முறையால் பாதிப்புற்றவர்களுக்கு நட்டஈடு வழங்குதல்.
 • வீடு, வியாபாரம் மற்றும் கைத்தொழில் புனரமைப்பதற்காக கடன் வழங்கல்.
 • பாதிப்புற்ற நபர்கள்/ விதவைகளுக்காக சுயதொழில் கடன் திட்டத்தினை அமுல்படுத்தல்.
 • யுத்தத்தினால் பாதிப்படைந்த பாடசாலை பிள்ளைகளுக்காக நிவாரணம் வழங்கல்.
 • சுயதொழில் நிவாரணக் கடன் திட்டம்.
 • வீட்டுக் கடன் திட்டம்
 • சமூகமயப்படுத்தப்பட்ட பயிலுனர்களுக்கான சுயதொழில் நிவாரணக் கடன் திட்டம்
 • கிராமிய புனர்வாழ்வுத் திட்டத்தை அமுல்படுத்துதல்.

சுய பணிகள் மேற்கொள்ளும் சேவைகளுக்காக புனர்வாழ்வு அதிகாரசபையினால் அமுல்படுத்த முடியுமான அதிகாரங்கள்

 • ஏதாவது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் ஏதாவது விதத்தில் கைப்பற்றுவதற்காக மற்றும் குத்தகைக்கோ அல்லது வாடகைக்கு எடுத்தல் அல்லது வழங்குதல், அடகு வைத்தல், உறுதிமொழி அளித்தல், விற்பனை செய்தல் அல்லது வேறு விதங்களில் வெளியேறச் செய்தல்.
 • 22வது சரத்தின் கீழ் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் அரசிற்கு வழங்கப்பட்ட அல்லது 23வது சரத்தின் கீழ் அரசிற்கு மீண்டும் வழங்கப்பட்ட பாதிப்படைந்த சொத்துக்களை அபிவிருத்தி செய்தலும் மீழக் கையளித்தலும்.
 • சுய பணிகள் மேற்கொள்வதற்குத் தேவைப்படக்கூடிய ஏதாவது அதிகாரசபை எண்ணக்கூடிய சகல ஒப்பந்தங்களிற்குள் தொடர்புபடுதல் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தல்.
 • பணத்தின் மூலம் அல்லது வேறு விதங்களிலான சகல பரிசில், மானியங்கள், நன்கொடைகள் பெறுவதற்காகவும் மற்றும் அதன் சுய பணிகளை மேற்கொள்வதற்கு உட்படுத்தல்.
 • அதிகாரசபையின் பணிகளை மேற்கொள்வதற்கு மனிதாபிமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.

மேலதிக செயற்பாடுகள்

புனர்வாழ்வு அதிகாரசபைக்குப் பொறுப்பான அமைச்சர் விஷேட சந்தர்ப்பங்களில் தேவையேற்படின் கடமைகளைப் பொறுப்பேற்பார். இதற்கமைய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளுக்கான உயர்ஸ்தானியராலயம், தேர்தல் வன்முறைகளுக்கான நட்டஈடு வழங்கும் பகுதி என்பன இயங்குதல்.